×

கோவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்

 

கோவை, நவ. 4: இந்திய தேர்தல் ஆணையம் வரும் ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய உத்தரவிட்டது. அதன்படி, கோவை மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, கடந்த வாரம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த வாக்காளர் பட்டியலில் கோவை மாவட்டத்தில் 14 லட்சத்து 96 ஆயிரத்து 770 ஆண் வாக்காளர்கள், 15 லட்சத்து 51 ஆயிரத்து 665 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 569 என மொத்தம் 30 லட்சத்து 49 ஆயிரத்து 4 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்கள் இன்றும், நாளையும் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

எனவே, 1.1.2024-ம் தேதியில் 18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் புதிதாக பெயர் சேர்க்க, வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய மற்றும் பெயர்கள் நீக்கம் செய்ய வேண்டுபவர்கள் படிவங்கள் மூலமாகவும் www.vsp.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline என்ற மொபைல் ஆப் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய வரும் டிசம்பர் 9-ம் தேதி வரை மனுக்கள் பெறப்பட உள்ளது. இந்த சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தியுள்ளார்.

The post கோவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் appeared first on Dinakaran.

Tags : Electoral Roll Special Revision Camp ,Coimbatore ,Election Commission of India ,Electoral Roll Special Correction Camp ,Dinakaran ,
× RELATED எடப்பாடிக்கு எதிரான மனு ஒத்திவைப்பு